May 12, 2010

காலாவதி....

ரேசன் கடைகளில்
புளுத்த அரிசி
ரவா மைதாவில்
உருண்டோடும்
வண்டுகள்..

அளவு..எடை குறையும்
சர்க்கரை..மண்எண்ணை
தேதி போடாத
பாக்கெட் பால்..

சாக்கடை நீர்
கலக்கும் குடிநீர்
அரசின் மதுக்
கடைகளிலேயே
போலி மது வகைகள்

பல அடுக்குகள்
ஏ.சி.செய்யப்பட்ட
பன்னாட்டு
நிறுவனங்களின்

காலாவதியான
அழகிய உணவுப்
பாக்கட்டுகளைக்
கண்டு கொள்வதில்லை
அதிகாரிகள்..

சந்து முனையில்
லுங்கி கட்டி
வியாபாரம் செய்யும்
அண்ணாச்சி
கடைகளைத்தான்

சுற்றி வருகிறார்கள்
சுகாதார ஆய்வாளர்கள்....

                     •••••••

கிழக்கு...

கிளி ஜோஷ்யம்
நாடி சோதிடம்
கை ரேகை

பேர் ராசி
தொழில் ராசி
நியூமராலஜி
நவரத்தினக் கல்
மோதிரம்

தோஷம் கழிப்பு
சோழி போட்டு
பிரசன்னம்
மனையடி சாஸ்திரம்
பில்லி சூன்யம்
நல்ல நேரம்

இப்படியாக
எத்தனையோ பார்த்தும்
உயர முடியவில்லை
வாழ்வில்...

கிழக்கே பார்த்த
அறையில்
தங்கச் சொல்கிறார்
வாஸ்து நிபுணர்

எப்படிக் கேட்பது?
கிழக்கே பார்த்த
அறையை
புழல் சிறையில்...?

                     •••••••

அட்சயதிருதி...










கணவனுக்குத் தெரியாமல்
சில்லறை சேர்த்து
உண்டியல் நிறையுமுன்னே
மென்மையாய் அதை
உடைத்து...

ஒரு கிராம்
தங்கக் காசுக்கு
பணம் தேற்றி...

நடக்க இடமில்லா
தி.நகர் வீதியில்
மக்கள் வெள்ளத்தில் நீந்தி
நகைக்கடை வாயிலில்
நுழையும் கூட்டத்தில்

வரிசையில் நின்று
வேர்த்து விறுவிறுத்து
முட்டி மோதி மிதிபட்டு
உள்ளே நுழைந்து

வெற்றிகரமாய் ஒரு கிராம்
நகை வாங்கி
வெற்றிப் புன்னகையுடன்
சோர்வு நீங்கி மகிழ்வுடன்
வீடு திரும்பியவள்

அதிர்வடைகிறாள்...

கழுத்தில் இருந்த
இரண்டு பவுன்
செயினைக் காணோம்...
                
                     •••••••

May 9, 2010

தவிர....

ஐ.பி.எல்லில்
விளையாடும்
கோடிகள்..

போலி மருந்துகளில்
மறைந்துள்ள
கோடிகள்

அர்சத்மேத்தா
அச்சடித்த
போலிப் பத்திரக்
கோடிகள்...

தேர்தல்களில்
கொட்டப்படும்
கோடிகள்...

திரைப்படத் தயாரிப்பில்
கரைக்கப்படும்
கணக்கில் வராத
கோடிகள்..

உரபேரம்
ஊறுகாய் பேரம்
பேர்பாக்ஸ் பேரம்
ஸ்பெக்ட்ரம் பேரம்

அரசியல்வாதிகளின்
சொத்துக் குவிப்பு
லஞ்ச ஊழல்
வன்முறை...அராஐகம்
சுவிஸ் வங்கியில் பணம்

எதைப் புடுங்க முடிகிறது
இந்த அரசுகளால்-?
கஞ்சிக்கு இல்லாதவர்கள்
துர்க்கும் துப்பாக்கியைத் தவிர...?
                                          
                     •••••••

March 16, 2010

கதவைத் திற

நித்தமும் ஆனந்தம் கண்ட
ஆன்மீக குருவே..
இளம் வயதில் துறவறம்
பூண்ட இறை அருளே...

பதினேழு நாடுகளில்
பல்லாயிரம் பக்தர்கள்..
கணக்கிட முடியாத
மடங்கள் பீடங்கள்

மாளிகைகள்..
பக்தியோடு ஆசிகள்
வழங்கினீர்கள்
பிரம்மச்சரியத்தின்
அவசியத்தைப்
போதித்தீர்கள்..
கதவைத் திற..
காற்று வரட்டும் என்றீர்கள்
காற்றுக்குப் பதில் சுனாமி
அல்லவா வந்துள்ளது..

பக்தர்களான எங்களை
கைகளை முடி
வணங்கச் சொன்னீர்கள்...

கண்களை முடி
தியானிக்ககச் சொன்னீர்கள்..
வாய் முடி மௌனம்
இருக்கச் சொன்னீர்கள்..

செவிகளை முடி ஐம் புலன்
அடக்கச் சொன்னீர்கள்..

இப்படி எங்களை
எல்லாவற்றையும்
முடச் சொன்ன நீங்கள்

உங்கள் அறைக் கதவைக்
கொஞ்சம் மூடச்
சொல்லியிருக்கக் கூடாதா
நடிகையிடம்....

                     •••••••

March 15, 2010

துணிவு

பயந்து பயந்து
செய்கிறார்கள்
வெளியே..

கொலை.. கொள்ளை
திருட்டு.. வழிப்பறி
போதைப் பொருட்கள்
கடத்தல்..

மது..விபச்சாரம்
கந்து வட்டி
கூலிப் படை
கட்டைப் பஞ்சாயத்து

இதையெல்லாம்
குற்றவாளிகள்
தைரியமாகச்
செய்கிறார்கள்
சிறைகளில்..

காவலர் அனுமதியுடன்.

மனம்

நான் சைவமாக
இருந்தாலும்
என் கணவர்
அசைவப் பிரியர்

மது அருந்துவார்
புகை பிடிப்பார்
தொடர்புகளும்
பல உண்டு

சீட்டாடுவார்
குதிரைப் பந்தயம்
போவார்

திருத்த முயன்றும்
முடியவில்லை
அனுசரித்து வாழப்
பழகிக் கொண்டேன்

எதையும்
மறைக்கத் தெரியாமல்
சொல்லி விடும்
அவரின் குழந்தை
மனத்திற்காக...

பயணம்

திருமணத்திற்குப்
போகும் வழியில்
எதிரே சவ ஊர்வலம்...

கடந்து செல்லும்
முகம் வாடிய
மனிதர்களைக்
காணும்போது

கலகலப்பான
உரையாடல்கள்
சிரிப்புகள்
மறைந்து விடுகின்றன
காரில்...

சிறிது நேரம்தான்
பழைய சிரிப்புகள்
பேச்சுக்கள்
தொடர்கின்றன...

வாழ்க்கைப் பாதையில்
நின்று நிதானித்து
பயணமாக
சிகப்பு பச்சை
விளக்குகள்...

விளக்குவதற்காகவே
வைக்கப்பட்டிருக்கின்றன
பல விளக்குகள்
பயணமாகாமல்...